முட்புதருக்குள் இயங்கும் சுகாதார நிலையம் பீரகுப்பத்தில் நோயாளிகள் திக்... திக் சிகிச்கைக்காக வரும் பாம்பு, காட்டுபன்றிகள்
திருத்தணி:திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், பீரகுப்பம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பொது மருத்துவம், சித்தா, ஆய்வகம் மற்றும் பிரசவம் போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.இதுதவிர பீரகுப்பம், கே.ஜி.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும் 400க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.இந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர் தங்கி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, ஏழு குடியிருப்புகள் உள்ளன.ஆனால், குடியிருப்புகளை முறையாக பராமரிக்காததால், தற்போது அறைகள் சேதமடைந்தும், குடியிருப்புகள் சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது.மேலும், பிரசவித்த பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் கட்டடம் அருகே செடிகள் வளர்ந்துள்ளதால், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் அடிக்கடி பிரசவ வார்டில் புகுந்துவிடுகின்றன. இதனால், நோயாளிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. இதன் காரணமாக, இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து விடுவதால், உள்நோயாளிகளாக பீதியில் உள்ளனர்.ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றியும், பழுதடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, கலெக்டர் ஒரு முறை பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.