திடக்கழிவு மேலாண்மை அம்போ புட்லுாரில் குவிந்து வரும் குப்பை
திருவள்ளூர்,:புட்லுார் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு சேதமடைந்து, முற்றிலும் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் ஒன்றியம், புட்லுார் ஊராட்சி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. ரயில் நிலையம் அருகில் உள்ளதால், புதிது புதிதாக குடியிருப்பு பகுதிகள் உருவாகி வருகின்றன. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில், 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.வீடுகளில் சேகரமாகும் குப்பையை துப்புரவு ஊழியர்கள் வீடு தோறும் சென்று அகற்றி வருகின்றனர். இவ்வாறு சேகரமாகும் குப்பையை தரம் பிரிக்க, புட்லுார் - அரண்வாயல் சாலையில், திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்பட்டது. தற்போது, இந்த திடக்கழிவு மேலாண்மை கிடங்கு முற்றிலும் சேதமடைந்து விட்டது.மேலும், மட்கும் மற்றும் மட்காத குப்பையை தரம் பிரிக்க தோண்டப்பட்ட குழிகளும் மண்ணால் மூடப்பட்டு உள்ளது. இதனால், இந்த மையத்தைச் சுற்றிலும், குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால், ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, தெருக்களில் தேங்கி உள்ளன. அவற்றை, கிராமவாசிகள் தீ வைத்து எரிப்பதால், இங்கு சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.