உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வலையில் சிக்கும் சூரை, அயிலா மீன்கள் பழவேற்காடு டு கேரளாவிற்கு பயணம்

வலையில் சிக்கும் சூரை, அயிலா மீன்கள் பழவேற்காடு டு கேரளாவிற்கு பயணம்

பழவேற்காடு, பழவேற்காடு மீனவ பகுதியில் உள்ள மீனவர்கள், பைபர் படகுகள் வாயிலாக கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப மீனவர்கள் வலையில் பாறை, மத்தி, அயிலா, சூரை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைக்கும். வஞ்சிரம், கிழங்கான், சங்கரா உள்ளிட்டவை குறைந்தஅளவில் கிடைக்கும்.கடந்த இரு நாட்களாக கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில், அயிலா மற்றும் சூரை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன.உள்ளூரில் இவற்றை விரும்பி சாப்பிடுவோர் குறைவு என்பதால், சந்தைகளில் இவற்றை வாங்க ஆளில்லை.கேரள மாநிலத்தவர் மத்தி, அயிலா, சூரை மீன்களை விரும்பி உண்பர் என்பதால், இவ்வகை மீன்களுக்கு அங்கு மவுசு அதிகம். சூரை மீன்களை தோலை உரித்து வெட்டி எடுக்கும்போது, ஆடு இறைச்சி போன்று இருப்பதால், அங்குள்ளவர்கள் விரும்பி உண்கின்றனர்.அயிலா மீன்களும் உடலுக்கு நல்ல சத்துக்களை தருவதால், அதையும் அவர்கள் விரும்புகின்றனர். தற்போது, மீனவர்கள் பிடித்து வரும் அயிலா, சூரை மீன்கள், கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.மொத்த வியாபாரிகள் மீனவர்களிடம் இவற்றை வாங்கி, பிளாஸ்டிக் பெட்டிகளில் ஐஸ் போட்டு பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்புகின்றனர்.பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதியில் அயிலா, சூரை மீன்களை படகுகளில் இருந்து இறக்குவது, எடைபோடுவது, பதப்படுத்துவது என, தொழிலாளர்கள் 'பிசி'யாக இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி