மெதுார் கோவில் குளத்தை சீரமைக்கும் பணி எப்போது?
பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், மிகவும் பழமை வாய்ந்த காமாட்சி சமேத பர்வதீஸ்வர் கோவில் அமைந்துள்ளது.பொன்னேரி - பழவேற்காடு சாலையை ஒட்டி, இக்கோவிலின் முகப்பில் உள்ள திருக்குளத்தில் தேங்கும் மழைநீர், கிராமவாசிகள் மற்றும் வியாபாரிகளின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகிறது. கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால், குளத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், குளத்தை சுற்றிலும் குப்பை குவிந்து காணப்படுகிறது. மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள குளக்கரை பகுதியில் தடுப்புகள் இல்லாததால், அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. குளத்தை சுற்றிலும் உள்ள செடி, கொடிகளை அகற்றி, நடைபாதை அமைத்தால், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், சாலையோர பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து, அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் எனவும், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, கோவில் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.