ஆரணி ஆற்று கரை சீரமைப்பு பணி அரைகுறை பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் வேஸ்ட் மீண்டும் 10 கிராமங்கள் பாதிப்புகளை சந்திக்கும் அபாயம்
பொன்னேரி:ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில், 16 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் கரை சீரமைப்பு பணிகள் அரைகுறையாக இருப்பதால், பாதிப்புகளை எண்ணி, 10 கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, தத்தமஞ்சி கிராமங்கள் வழியாக ஆரணி ஆறு பயணித்து, பழவேற்காடில் முடிகிறது.வெள்ளப்பெருக்கு காலங்களில், இங்குள்ள கரைகள் உடைப்பு ஏற்படுகிறது. உடைப்புகள் வழியாக ஆற்று நீர் அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கிறது.ஐந்து ஆண்டுகளாக கரைகளில் உடைப்பு ஏற்படுவதும், கிராமங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதும் தொடர்கதையாகி இருந்து வருகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.தொடர் கோரிக்கையின் பயனாக பெரும்பேடு, தத்தமஞ்சி, சோமஞ்சேரி பகுதிகளில், 16 கோடி ரூபாயில் கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த ஏப்ரல் மாதத்தில் பணிகள் துவக்கப்பட்டு, உடைப்பு ஏற்படும் பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைத்து கரைகள் பலப்படுத்தப்படுகின்றன.இந்நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் கரைகள் கரைந்து, விரிசல்கள் ஏற்பட்டு இருக்கிறது. கரைகள் உள்வாங்கி, அதில் மழைநீர் தேங்கி உள்ளன. சரிவு பகுதிகளில் மண் கரைந்து, விவசாய நிலங்களுக்கு செல்கிறது.மண் சரிவை தடுக்க விவசாயிகள் மரத்துண்டுகள், செடிகளை போட்டு தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். கான்கிரீட் சுவர் அமைத்த ஒரு சில இடங்களில் கரைகள் பலப்படுத்தபடாமல் பணிகள் அரைகுறையாக நிற்கிறது. கரை சீரமைப்பு பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்படுவதாக, கிராமவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். பணிகள் துவங்கி, எட்டு மாதங்களுக்கு மேலாகியும் நிறைவு பெறாமல் இருப்பதால், கடந்தாண்டை போல நடப்பாண்டும் கரை உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை எண்ணி சோமஞ்சேரி, ரெட்டிப்பாளையம், கடப்பாக்கம், தத்தமஞ்சி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த, 1,500 குடியிருப்புகளில் வசிப்போர் மற்றும் 3,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.நீர்வளத்துறையினர் உடனடியாக கரை சீரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, சோமஞ்சேரியைச் சேர்ந்த செல்லப்பன் கூறியதாவது:மழைக்கு முன் பணிகளை முடிக்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமல் மந்தகதியில் நடக்கிறது. அவையும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. குறைந்த பணியாளர்கள், இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.ஆற்றின் கரையோரங்களில் இருந்து சவுடு மண் எடுத்து போடப்பட்டது. அவை, தற்போது பெய்து வரும் மழையில் ஆற்றில் பாதியும், விவசாய நிலங்களில் மீதியும் என கரைந்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், பணிகள் நடைபெறவில்லை. அதிகளவில் மழை பெய்து, கடந்த ஆண்டை போலவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கரைகள் உடைந்து மழைநீர் கிராமங்களை சூழும் அபாயம் உள்ளது.மேலும், அதிகாரிகளின் தொடர்ந்து கண்காணிப்பது இல்லை. பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அதிகாரிகளின் அலட்சியத்தால், மீண்டும் ஒரு முறை கிராமங்கள் பாதிப்புகளை சந்திக்கும் நிலையே உள்ளது. பாதிப்புகளை எண்ணி தினம் தினம் அச்சத்துடன் இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.