140 அடி கால்வாய், 40 ஆக சுருங்கியது பனப்பாக்கத்தில் மழைநீர் செல்வதில் சிக்கல்
பொன்னேரி:பனப்பாக்கத்தில் 140 அடி அகலத்தில் இருந்த கால்வாய், 40 அடியாக சுருங்கியதாலும், செடி, கொடிகள் வளர்ந்திருப்பதாலும் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பொன்னேரி அடுத்த குமரஞ்சேரி கிராமத்தில் இருந்து பனப்பாக்கம், பெரியகரும்பூர், குடிநெல்வாயல் கிராமங்கள் வழியாக, பழவேற்காடு ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உரிய பராமரிப்பு இன்றி உள்ளது.இந்த கால்வாய், 140 அடி அகலத்தில் இருக்க வேண்டிய நிலையில், இருபுறமும் விவசாய நிலங்களின் ஆக்கிரமிப்பால், 40 அடியாக சுருங்கியுள்ளது.அதிலும், மரம், செடிகள் வளர்ந்து, கரைகள் சேதமடைந்துள்ளன. இதனால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதிகப்படியான மழை பெய்தால், கால்வாயில் தண்ணீர் செல்ல வழியின்றி, அருகில் உள்ள விவசாய நிலங்களை மூழ்கடிக்கிறது. கிராமங்களில் உள்ள குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்து விடுவதால், கிராமவாசிகளும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.எனவே, மழைநீர் கால்வாயை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.