அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2ல் திருத்தணியில் 5 ஊராட்சிகள் தேர்வு
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2ன்கீழ், ஐந்து ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது. ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம், 5 ஊராட்சிகள் முதல், அதிகபட்சமாக, 7 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, மேற்கண்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.அந்த வகையில், வரும், 2025 - 26ம் ஆண்டு, சின்னகடம்பூர், கன்னிகாபுரம், மத்துார், சத்திரஞ்ஜெயபுரம், டி.சி.கண்டிகை ஆகிய 5 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தற்போது, இந்த ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, பணி மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஆகியோர் ஒன்றிணைந்து சர்வே பணியில் ஈடுபட்டுள்ளனர்.இப்பணிகள் முடிந்தவுடன் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2ன் வாயிலாக நிதியுதவி வழங்கப்படும் என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.