மதிய உணவு சாப்பிட்ட 5 மாணவியர் மயக்கம்
திருத்தணி:திருத்தணி அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவியர் திடீரென மயங்கியதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருத்தணி ஒன்றியம் சூர்யநகரம் ஊராட்சிக்குட்பட்டது கெஜலட்சுமிபுரம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மொத்தம், 27 மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. மதியம், 2:00 மணியளவில், மதிய உணவு சாப்பிட்ட மூன்றாம் வகுப்பு மாணவி, நிவேதா, நான்காம் வகுப்பு மாணவியர் சத்யா, தேவசேனா மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவியர் ஜெய்ஸ்ரீ, ஜோதி ஆகிய ஐந்து பேரும் வகுப்பறையில் மயங்கினர். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் உதவியுடன் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் சேர்த்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மாணவியர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியர் அனைவரும் நன்றாக உள்ளனர். தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்தானம், வருவாய் துறை அலுவலர்கள் மருத்துவமனைக்கு வந்து மாணவியரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.