பழவேற்காடில் 6,622 ஆலிவ் ரிட்லி ஆமை மூட்டைகள் சேகரிப்பு
பழவேற்காடு:ஆழ்கடலில் வசிக்கும் 'ஆலிவ் ரிட்லி' வகை ஆமைகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் - ஏப்ரல் மாதங்களில், கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொறிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளன.வங்காள விரிகுடா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பழவேற்காடு பகுதியிலும் 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் முட்டையிடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பழவேற்காடு வனத்துறையினர் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை பாதுகாப்பாக சேகரித்து, குஞ்சு பொறித்த பின், அவற்றை கடலில் கொண்டு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கடந்த டிசம்பர் முதல், பழவேற்காடு வனத்துறையினர் முகத்துவாரம் பகுதியில் இருந்து காட்டுப்பள்ளி வரை தினமும் இரவு நேரங்களில் கடற்கரை பகுதிகளில் முட்டைகளை சேகரித்து வருகின்றனர்.இவற்றை பழவேற்காடு கூனங்குப்பம் பகுதியில் உள்ள பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதுவரை, 6,622 முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. பொறிப்பகத்தில் இதுவரை, 815 குஞ்சு ஆமைகள் கடலில் விடப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கடந்தாண்டு மார்ச் மாதம் வரை, 11,786 முட்டைகள் சேகரிக்கப்பட்டு கடலில் விடப்பட்டன. நடப்பாண்டு, ஆமைகள் கடற்கரை வருவது குறைந்துள்ளதாகவும், பல்வேறு காரணிகளால் அவை இறந்து கரை ஒதுங்கியதாலும், முட்டைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.