உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெஞ்சல் புயலால் 7,930 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு ரூ.5.41 கோடி நிவாரணம் கேட்டு அரசுக்கு பரிந்துரை

பெஞ்சல் புயலால் 7,930 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு ரூ.5.41 கோடி நிவாரணம் கேட்டு அரசுக்கு பரிந்துரை

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு நவ., மாதம் 'பெஞ்சல்' புயல் உருவானது. மாவட்டம் முழுதும் ஐந்து நாட்களாக பலத்த மழை பெய்தது.சம்பா பருவத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், சோழவரம், திருவள்ளூர், கடம்பத்துார் உட்பட மாவட்டம் முழுதும், 90,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.மேலும், தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, தென்னை, பூ வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருப்பு வகை பயிர்கள் என, மாவட்டம் முழுதும், 20,000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.இந்நிலையில், 'பெஞ்சல் புயல்' காரணமாக, தொடர் மழை பெய்ததில், சோழவரம், மீஞ்சூர், திருவாலங்காடு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.மழையால், வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாமல், விவசாயிகள் அவதிப்பட்டனர்.

கூட்டாய்வு

பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர், வெள்ளத்தால் தண்ணீரில் மூழ்கியது.இதையடுத்து, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி, வேளாண் துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, சேதமடைந்த பயிர் விபரம் குறித்து கூட்டாய்வு நடத்தினர்.சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்களில், அதிகளவில் நெற்பயிர் சேதமடைந்திருப்பது, ஆய்வில் தெரியவந்தது.இருப்பினும், 33 சதவீதத்திற்கு மேல் பாதிப் படைந்த சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என, வேளாண் துறையினர் ஆய்வில் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.கடந்த காலங்களில், வெள்ளம், வறட்சி போன்ற காலகட்டத்திலும், 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த பயிர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

கணக்கெடுப்பு

அந்த அடிப்படையில், 'பெஞ்சல் புயல்' காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நெல் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அந்த கணக்கெடுப்பில், நெற்பயிர் 6,300 ஏக்கர், பருப்பு வகைகள் 150 ஏக்கர், எண்ணெய் வித்து பயிர்கள் 150 ஏக்கர் என, 6,600 ஏக்கர் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, தென்னை மற்றும் மல்லிகை, ரோஜா போன்ற மலர் வகைகள் என, 1,330 ஏக்கர் பரப்பளவிற்கு, வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டு உள்ளது.சேதமடைந்த பயிர்களின் ஏக்கர் விபரம் குறித்து, வேளாண் மற்றும் வருவாய் துறையினர், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.மேலும், அந்த அறிக்கையில், சேதமடைந்த 6,600 ஏக்கர் நெல் மற்றும் பருப்பு வகை பயிருக்கு, 4 கோடியே 48 லட்சத்து 47,649 ரூபாய் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. தோட்டக்கலை பயிருக்கு, 93 லட்சத்து 51,245 ரூபாயும் என, மொத்தம், 5 கோடியே 41 லட்சத்து 98,894 ரூபாய் நிவாரணம் வழங்க நிதி தேவை என கூறப்பட்டுள்ளது.

அறிக்கை

இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக, மாவட்டம் முழுதும் பலத்த மழை பெய்தது.நெல் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் தண்ணீர் தேங்கியதால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தால், 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த பயிர் பரப்பளவு குறித்து, தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வெள்ள நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி