உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 78 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கம்

78 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே துராபள்ளம் பஜார் பகுதியில், 1946ம் ஆண்டு, பெரிய ஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் துவங்கப்பட்டது. இதுவரை அந்த சங்கத்திற்கு என சொந்த இடம் இல்லாததால், கடந்த, 78 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.தற்போது, துராபள்ளம் பகுதியில், தொம்பரை ஆண்டவர் கோவில் அருகே ஒரு வாடகை கட்டத்தில் அந்த சங்கம் இயங்கி வருகிறது. அந்த சங்கத்தில், எளாவூர், பெரிய ஓபுளாபுரம், சின்ன ஓபுளாபுரம், சுண்ணாம்புகுளம், மெதிப்பாளையம், நரசிங்கபுரம் உள்ளிட்ட, 12 ஊராட்சிகள் இடம் பெறுகின்றன. அதன் கீழ், 16 ரேஷன் கடைகள், 5,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். சங்க உறுப்பினர்களாக, 9,500 பேர் உள்ளனர்.குறுகலான வாடகை கட்டடத்தில் அந்த கூட்டுறவு சங்கம் இயங்குவதால், ஊழியர்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமத்தை சந்திப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ரேஷன் கடை பணிகளும் பாதிக்கப்படுகிறது. பழமையான கூட்டுறவு சங்கத்திற்கு என தனி இடம் ஒதுக்கி, புதிய கட்டடம் நிறுவ வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இது குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛பெரியஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் நிறுவ, துராபள்ளம் கிராமத்தில், 10 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அதன் மீதான அறிக்கையை, நில நிர்வாக ஆணையரிடம் சமர்ப்பிக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு துறையின் பெயரில் இடம் மாற்றம் செய்யப்பட்டதும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை