திருவள்ளூரில் வேளாண் உதவி இயக்குநர்கள்... 14க்கு 5 போதுமா?: விவசாயிக்கு நலத்திட்ட உதவி கிடைப்பதில் சிக்கல்
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், 14 பணியிடங்களுக்கு, ஐந்து வேளாண் உதவி இயக்குநர்கள் மட்டுமே இருப்பதால், அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் பெறுவதிலும் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் என, 14 ஒன்றியங்கள் உள்ளன. மாவட்டத்தில் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல், வேர்க்கடலை, கரும்பு, சிறுதானியங்கள், காய்கறி, பூ வகைகள் பயிரிட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள வேளாண் அலுவலகத்திலும் உதவி இயக்குநர், வேளாண் அலுவலர் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
விழிப்புணர்வு
இவர்கள், விவசாயிகளிடம் பயிர் பாதுகாப்பு, மத்திய - மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர். மேலும், விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர் குறித்தும், நோய் தொற்றில் இருந்து பயிர்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். நெல், வேர்க்கடலை, கரும்பு, காய் கறி போன்ற பயிர்களுக்கு அரசு வழங்கும் மானியம் விவசாயிகளை சென்றடைவதற்கு முக்கிய பங்கு வகிப்பவர் வேளாண் உதவி இயக்குநர். குறிப்பாக, விவசாயிகளுக்கு கிசான் அட்டை வழங்குதல், மத்திய அரசின் 6,000 ரூபாய் உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களுக்கு, விவசாயிகளை தேர்வு செய்து, அரசிற்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்டத்தில், 14 வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்களில், ஐந்து பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், பூண்டி, சோழவரம் மற்றும் கடம்பத்துார் ஆகிய ஒன்றியங்களில் மட்டுமே உதவி இயக்குநர்கள் உள்ளனர். மற்றவை காலியாக உள்ளன. இதனால், வேளாண் உதவி இயக்குநர் இல்லாத ஒன்றியங்களில், விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலியாக உள்ள வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்களில், அதே அலுவலகங்களில் பணிபுரியும் வேளாண் அலுவலர் அல்லது உதவி வேளாண் அலுவலர்கள் பொறுப்பு உதவி இயக்குநர்களாக உள்ளனர். இதனால், அவர்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் திணறுகின்றனர். இவர்கள், பயிர்களை ஆய்வு செய்வதற்கும், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நேரமின்றி, அலுவலக பணியிலேயே உள்ளனர். எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். கொள்கை முடிவு
திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறை அதிகாரி கூறியதாவது: காலி பணியிடங்கள் குறித்து, மாதந்தோறும் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதுகிறோம். உதவி இயக்குநர் பணியிடம் நிரப்புவது அரசின் கொள்கை முடிவு. அரசின் கவனத்திற்கு கலெக்டர் தான் கொண்டு சென்று, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். திருவள்ளூருக்கு வர தயங்கும் உதவி இயக்குநர்கள் தமிழகத்தில் ஆண்டுதோறும் வேளாண் துறையில் பணியிட மாறுதலுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பெரும்பாலான உதவி இயக்குநர்கள், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருவதற்கு அச்சப்பட்டு, 'சிபாரிசு' மூலம் அவர்கள் விரும்பிய இடத்திற்கு பணிமாறுதல் பெற்று செல்கின்றனர். நடப்பாண்டில், மொத்தம் 45 வேளாண் அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவிபெற்றனர். இவர்களில் ஒருவர் கூட, திருவள்ளூர் மாவட்டத்திற்கு வராமல், பிற மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இதற்கு காரணம், அதிகமான காலி பணியிடங்கள் உள்ளதால், அனைத்து வேலைகளும் அவர்களே செய்ய வேண்டும் என்பதால் அச்சப்படுகின்றனர். வேளாண் துறையில் ஆட்கள் குறைப்பு ஒவ்வொரு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்திலும், வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர், இளநிலை உதவியாளர், கணினி இயக்குபவர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் என, குறைந்த பட்சம் 10 பேர் பணிபுரிந்து வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 14 வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும், தற்போது ஒரேயொரு ஊழியர், இரண்டு அல்லது மூன்று வேளாண் உதவி அலுவலர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால், கூடுதல் பணிச்சுமையால் வேளாண் அலுவலர்கள் மன உளைச்சலில் தவித்து வருகின்றனர்.