உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிப்காட் வளாகத்திற்காக வெட்டப்படும் மரங்களுக்கு...மாற்று ஏற்பாடு: மாநெல்லுாரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

சிப்காட் வளாகத்திற்காக வெட்டப்படும் மரங்களுக்கு...மாற்று ஏற்பாடு: மாநெல்லுாரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

கும்மிடிப்பூண்டி:: புதிதாக அமையவுள்ள மாநெல்லுார் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள காப்பு காடுகளில் நடுவதற்காக, வனத்துறை சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய இரு சிப்காட் வளாகங்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டியை தொடர்ந்து, 1,127 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்ட தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகம் முழுதும், தொழிற்சாலைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.தேர்வாய்கண்டிகை சிப்காட்டில் தற்போது இடம் இல்லாத காரணத்தால், அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகளவில் உள்ள மாதர்பாக்கம் பகுதியில், புதிதாக மாநெல்லுார் சிப்காட் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.உத்தரவுஇதற்காக மாநெல்லுார், மாதர்பாக்கம், சூரப்பூண்டி, சாணாபுத்துார், வாணியமல்லி ஆகிய ஐந்து ஊராட்சிகளில் இருந்து, 2,000 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 2,200 ஏக்கர் பட்டா நிலம் என, மொத்தம் 4,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.மேற்கண்ட பகுதியை தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கும் போது, அங்குள்ள மரங்களை அகற்ற வாய்ப்புள்ளது. அதனால், கையகப்படுத்தும் நிலத்தில் உள்ள மரங்களை கணக்கிட, வனத்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.மாநெல்லுார் சிப்காட் பயன்பாட்டிற்கு வரும் போது, சிப்காட் வளாகத்தில் ஒதுக்கப்படும் திறந்தவெளி இடங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பசுமை வளையத்தில், அதே எண்ணிக்கையிலான மரங்கள் நட வேண்டும் என, அரசு தெரிவிக்க இருக்கிறது.வனத்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில், மாநெல்லுார் சிப்காட் அமையவுள்ள இடத்தில், 6 மீ., உயரத்தில், ஒரு லட்சம் மரங்கள் இருப்பது தெரியவந்தது.பசுமை வளையம்இருப்பினும், மாநெல்லுார் சிப்காட் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் முன், சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள காப்பு காடுகளில், ஒரு லட்சம் பாரம்பரிய மரக்கன்றுகள் நட அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக, மாதர்பாக்கம் அடுத்த ராமசந்திராபுரத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமாக நாற்றாங்கால் பண்ணையில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.அங்கு, புங்கன், ஆலம், அரசன், நாவல், நீர் மருது, செம்மரம் உள்ளிட்ட பாரம்பரிய மரகன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இழப்பை இரு மடங்காக ஈடு செய்யும் வகையில், சிப்காட் வளாகம் துவங்கும் முன், சுற்றியுள்ள காப்பு காடுகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, சிப்காட் வளாகத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை வளர்த்து, பசுமை வளையத்தை வலு பெற செய்ய வேண்டும் என, அரசு முடிவு செய்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் மாதர்பாக்கம் சுற்றியுள்ள ஏடூர், பாலவாக்கம், சிறுவாடா, நேமளூர் ஆகிய காப்பு காடுகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்க இருக்கிறோம்.- வனத்துறை அலுவலர்,கும்மிடிப்பூண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை