பயன்பாடில்லாமல் வீணாகி வரும் அங்கன்வாடி மையம்
பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சி இருளர் காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் சேதமடைந்திருந்தது. இதையடுத்து அங்கன்வாடி மைய குழந்தைகள் அருகில் உள்ள பிற அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டனர். ஊரக வளர்ச்சி துறை சார்பில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து 16.55 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. பணி முடிந்து ஆறு மாதங்களாகியும் இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல், பூட்டியே கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் 'குடி மகன்'களின் கூடாரமாக மாறி விடுகிறது. கடம்பத்துார் ஒன்றிய அதிகாரிகள், புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.