அரசாணைக்கு பின் கருத்து கேட்பு கேலியானது: அ.தி.மு.க.,
திருவள்ளூர்: ''மாநகராட்சி, நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்ட பின், மக்களிடம் கருத்து கேட்பது கேலிக்குரியதாக உள்ளது'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி நகராட்சிகளுடன் அருகில் உள்ள ஊராட்சிகள் இணைக்கப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த விபரமும் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.இதை விரும்பாத ஊராட்சியினர், ஒரு வாரமாக பல்வேறு இடங்களில், சாலை மறியல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஊராட்சி மக்கள் இணைப்பு குறித்த கருத்தினை பதிவு செய்யலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு குறித்து, திருவள்ளூரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரமணா கூறியதாவது:ஒரு முடிவு எடுப்பதற்கு முன், மக்களிடம் முதலில் கருத்து கேட்க வேண்டும். மக்களின் முடிவினை பரிசீலனை செய்து, அதில் உள்ள விளக்கத்தினை ஏற்று, இறுதி முடிவு எடுத்த பின்னரே, அரசாணை வெளியிடப்பட வேண்டும்.இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு இந்த மரபினை கடை பிடிக்கவில்லை. முதலில் அரசாணை வெளியிட்டு, அடுத்த நாளே அரசிதழில் அறிவிப்பு செய்து விட்டு, தற்போது மக்களிடம் கருத்து கேட்டுள்ளது கேலிக்கு உரியதாக உள்ளது.தங்களிடம் தெளிவான முடிவு இல்லை என்பதையே இந்த முரண்பாடான அறிவிப்பு காண்பிக்கிறது. முதலில், மக்களிடம் கருத்து கேட்டு, அதன் பின்னரே இணைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.