மேலும் செய்திகள்
வேகமாக வந்த கார் மோதி 36 ஆடுகள் உயிரிழப்பு
02-Aug-2026
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், உரிய 'பர்மிட்' இல்லாமல் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு போக்குவரத்திற்கு அடுத்தபடியாக ஷேர் ஆட்டோக்களையே நம்பியுள்ள பயணியரை, புளிமூட்டைகளை போல் ஏற்றிச்செல்வதால், அவற்றை முறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தங்கள் சொந்த வாகனத்தில் செல்லவே விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம், பல்வேறு பகுதிகளுக்கு, சரியான பேருந்து போக்குவரத்து வசதி இல்லை என்பதுதான். குறிப்பாக, காலை, மாலை வேளைகளில், பகுதிமக்கள் வேலைக்கு சென்று வர, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் சென்று வர, அரசு பேருந்துக்கள் இயக்கம் முறையாக இல்லை. இதேபோல், பேருந்து வழித்தடங்கள் சரியாக இணைக்கப்படாத பகுதிகளில், மக்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோவையே விரும்புகின்றனர். திருவள்ளூரில், ஷேர் ஆட்டோக்கள் தான் பேருந்து வழித்தடங்கள் இல்லாத அல்லது பகுதிமக்கள் கூட்டம் நிரம்பி வரும் வழித்தடங்களில், போக்குவரத்து வசதிகளை அளிக்கின்றன. குறிப்பாக, திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், பகுதிமக்கள ஷேர் ஆட்டோக்களில் தான் சென்று வருகின்றனர். தற்போது, திருவள்ளூரில் மட்டும், 2,000த்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் உட்பட, மாவட்டம் முழுதும் 10,000த்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஷேர் ஆட்டோக்கள், முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வருகின்றன. ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், லைசென்ஸ் இல்லாமல் ஓட்டி வருவதால், பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அரசு போக்குவரத்திற்கு அடுத்தபடியாக ஷேர் ஆட்டோக்களையே நம்பியுள்ள பயணியரை, புளிமூட்டைகளை போல் ஏற்றிச்செல்வதால், அடிக்கடி விபத்தில் சிக்கி, உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. தற்போது, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிடையே பயணியரை ஏற்றுவதில், இறக்குவதில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால், பயணியர் கடும் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டும் விழித்துக் கொள்ளும் அரசு அதிகாரிகள், அதன்பின் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினர், ஷேர் ஆட்டோக்களை கண்டும் காணாமல் விடுவதே காரணம் என, பகுதிமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஷேர் ஆட்டோக்கள் பற்றி பயணி ஒருவர் கூறியதாவது: பல இடங்களில் அரசு பேருந்துக்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. அரசு பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், பெரும்பாலான பயணியர் எளிதில் கிடைக்கும் ஷேர் ஆட்டோக்களையே பயன்படுத்துகின்றனர். மேலும், தங்கள் விருப்பப்பட்ட இடத்தில் இறங்கிக்கொள்ள, ஷேர் ஆட்டோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், கட்டணம் கொஞ்சம் அதிகமாகத் தான் உள்ளது. அரசு பேருந்துகள் முறையாகவும் கூடுதலாகவும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, கூடுதல் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை இயக்க வேண்டும். அதுமடுமின்றி, ஷேர் ஆட்டோக்கள் பயன்பாட்டை ஆய்வு செய்து, வரன்முறைபடுத்தவும், முறையான அனுமதியுடன் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் நகரில் இயங்கும் ஷேர் ஆட்டோக்கள் குறித்து, அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதில், கடந்த ஓராண்டில், இன்சூரன்ஸ், பிட்னஸ் என, 55 வாகனங்களுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் 2.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் காலங்களில் பிற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், முறையான அனுமதி, இன்சூரன்ஸ், பிட்னஸ் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். - ராமகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர், திருவள்ளூர். போக்குவரத்தில் இரண்டாவது இடம் இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பேருந்துகள், 2013ம் ஆண்டில், பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், திருவள்ளூரில் 18 லட்சத்திற்கும் அதிகமான பயணியர், ஒவ்வொரு நாளும் ஷேர் ஆட்டோக்களையே பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்தது. இது, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பயணியர் சேவைக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநகரில், தற்போது 3,600 எம்.டி.சி., பேருந்துகள் இருப்பதால், நகரம் முழுதும் 12,000 ஷேர் ஆட்டோக்கள், தினசரி 2.50 லட்சத்திற்கும் அதிகமான பயணங்களை மேற்கொள்வதாக ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்கள், தினமும் மொத்தம் 16.20 லட்சம் கி.மீ., துாரத்தை கடக்கின்றன என்றும், ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
02-Aug-2026