மேலும் செய்திகள்
மணல் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது
20-Sep-2025
திருவாலங்காடு, கொசஸ்தலையாற்று படுகையில் மணல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், கனகம்மாசத்திரம், ஆற்காடுகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்படவில்லை. கட்டுமான பணி முழுதும் எம்.சாண்ட் மூலம் நடந்து வருகிறது. எம்.சாண்ட் மணலை வைத்து, பூச்சுப்பணி உள்ளிட்ட ஒரு சில பணிகள் மட்டுமே மேற்கொள்ளலாம். சென்ட்ரிங், துாண் அமைக்கும் பணிகளுக்கு, ஆற்று மணலை தான் பயன்படுத்துகின்றனர். மாவட்டத்தில் எங்கும் மணல் குவாரி செயல்படதா நிலையில், சின்னம்மாபேட்டை, பழையனுார் பகுதியில் கட்டுமானம் நடைபெறும் இடங்களில், ஆற்று மணல் குவிக்கப்பட்டுள்ளது. திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட கொசஸ்தலையாற்றை ஒட்டிய பகுதிகளான நல்லாட்டூர், ஆற்காடுகுப்பம், மணவூர்குப்பம் கண்டிகையில், இரவு முழுதும் இருசக்கர வாகனங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. அதேபோல், சின்னம்மாபேட்டை, ராமாபுரம், காவேரிராஜபுரம் உள்ளிட்ட ஓடை பகுதியிலும், மண் திருட்டு தாராளமாக நடக்கிறது. இந்த மணலை ஓரிடத்தில் சேமித்து, பின் ஆற்று மணல் கேட்பவர்களுக்கு டிராக்டர் மற்றும் லாரி மூலமாக விற்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மணல் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல் துறை ஆகியோரிடையே ஒருங்கிணைப்பு இல்லை. இது, மணல் திருடர்களுக்கு சாதகமாக உள்ளது. காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. இரவு நேரத்தில் மணல் திருட்டை தடுக்க, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக, அவர்களிடம் பணம் பெற்று செல்கின்றனர். ஆரம்பத்தில், ஒரு சிலர் மட்டுமே இருசக்கர வாகனங்களில் மணல் திருடி வந்த நிலையில், தற்போது 20க்கும் மேற்பட்டோர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுதும், இருசக்கர வாகனங்களில் மணல் மூடைகளை அடுக்கி கொண்டு பலரும் செல்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, மணல் திருட்டை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
20-Sep-2025