உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பி நீர் வெளியேற்றம்

சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பி நீர் வெளியேற்றம்

ஊத்துக்கோட்டை:சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நேற்று காலை 8:00 மணி முதல் வெயில் சுட்டெரித்தது. மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பூண்டி, கடம்பத்துார் புல்லரம்பாக்கம், மணவாளநகர், ஈக்காடு, காக்களூர், உட்பட பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். அதே நேரத்தில் மழை காரணமாக பூமி குளிர்ந்து குளிர் காற்று வீச தொடங்கியதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். திருவாலங்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று மாலை 5:30 மணி முதல் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை, 3:00 மணிக்கு மேல் மேக கூட்டங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஆந்திராவில் உருவாகும் ஆரணி ஆறு, நகரி, பிச்சாட்டூர், நாகலாபுரம் வழியே, 65.20 கி.மீட்டர் பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது. அங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலேஸ்வரம், ஆரணி, ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் வழியே, 66.40 கி.மீட்டர் துாரம் பாய்ந்து புலிக்காட் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது. ஆரணி ஆறு பாயும் இடங்களில், ஐந்து தடுப்பணைகள், மூன்று அணைக்கட்டுகள் கட்டி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இவ்வாறு தேக்கி வைக்கப்படும் நீரால் சுற்றியுள்ள, 5 கி.மீ., துாரத்திற்கு நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகும். ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் சிட்ரபாக்கம் அணையில் ஏற்கனவே தண்ணீர் இருந்த நிலையில், மழைநீரால் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி