திருவள்ளூரில் 20 அரசு பள்ளிகளுக்கு ரூ.3.50 கோடியில் வகுப்பறை கட்டடம்
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில், எட்டு ஒன்றியங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, 20 வகுப்பறை கட்டடம் கட்ட, 3.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஓரிரு நாளில் பணிகள் துவக்கப்பட உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் 984 தொடக்க பள்ளிகள், 257 நடுநிலைப் பள்ளிகள், 130 உயர்நிலை பள்ளிகள், 119 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,490 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒன்றிய நிர்வாகம், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை பராமரித்தும், புதிய வகுப்பறைகள், ஆய்வகம் போன்ற கட்டடங்களை கட்டி வருகிறது. இந்நிலையில், 2024 - 25ல், நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வகுப்பறைகள், கணினி வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்ட, 3.50 கோடி ரூபாயை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதியின் மூலம் எல்லாபுரம், மீஞ்சூர், பூந்தமல்லி, சோழவரம், திருத்தணி, திருவாலங்காடு, வில்லிவாக்கம் மற்றும் புழல் ஆகிய எட்டு ஒன்றியங்களில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் மூன்று மாதத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு விட வேண் டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.