| ADDED : டிச 05, 2025 05:15 AM
திருமழிசை: திருமழிசையில் குப்பையில் மாயமான வைரக்கல் பதித்த தங்க கம்மலை குப்பையில் கண்டு பிடித்து ஒப்படைத்த துாய்மை பணியாளர்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் பாராட்டினர். திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட அர்பன் ஹோம்ஸ் என்னும் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் அருள்ஜோதி, 63. மூதாட்டியான இவர் நேற்று முன்தினம் காலை தனது பகுதிக்கு வந்த துாய்மை பணியாளரிடம் வீட்டில் சேகரமான குப்பையை கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் வைத்திருந்த வைரக்கல் பதித்த 3 கிராம் தங்க கம்மல் ஒன்று மாயமானது தெரிந்தது. குப்பையை துாய்மை பணியாளர்களிடம் கொடுத்தபோது 1.5 லட்சம் மதிப்புள்ள கம்மல் விழுந்திருக்கலாம் என அருள்ஜோதி 13வது வார்டு கவுன்சிலர் ஜெயசுதாவிடம் தெரிவித்தார். தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் பேரூராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் குப்பையை சேகரித்த தூய்மைப் பணியாளர்கள் பாரதி, 30, மற்றும் பாகு, 24 ஆகியோர் கம்மலை தேடினர். நேற்று காலை துாய்மை பணியாளர்கள் வைரக் கம்மலை மீட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், தலைவர் மகாதேவன் மற்றும் கவுன்சிலர், துாய்மை பணியாளர்கள் முன்னிலையில் மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். துாய்மை பணியாளர்களை பாராட்டினர்.