புத்துயிர் பெறும் கலெக்டர் அலுவலக வளாகம்
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகம் சீரமைக்கப்பட்டு, வாகன நிறுத்தம், பூங்கா சீரமைப்பு பணி விறுவிறுப்பாக நடக்கிறது.திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர், எஸ்.பி., வேளாண்மை, வனத்துறை, ஊரகவளர்ச்சி முகமை, ஆயுதப்படை மைதானம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக, தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் அரசு அலுவலர்களின் வாகனங்களால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதை தவிர்க்க, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில், கலெக்டர் அலுவலக வளாகம் சீர்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அலுவலர் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக, தனித்தனியாக வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் சீரமைக்கப்பட்டு, நடுவில் உள்ள செடிகள் வளர்ந்துள்ள இடத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் அறை எதிரில் உள்ள கழிப்பறை நவீன முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது. அலுவலக நுழைவு வாயிலில் தரைதளம், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ள அரசு அலுவலக துறை விவரம் குறித்த தகவல் பலகை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.