திருத்தணி புதிய பேருந்து நிலையத்திற்கு ரூ.5.30 கோடியில் கான்கிரீட் தளம்
திருத்தணி:திருத்தணி நகரில், புதிய பேருந்து நிலையத்திற்கு, 5.30 கோடி ரூபாய் மதிப்பில் கான்கீரிட் தளம் அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே அண்ணா பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. குறுகிய பேருந்து நிலையம் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. இதையடுத்து கடந்த, 2023ம் ஆண்டு, அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 12.74 கோடியில், நான்கரை ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து புதிய பேருந்து நுழைவாயிலில், 2.94 கோடியில், முருகன் கோவில் தோற்றத்தில் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. பின் தரைத்தளம் மட்டும் அமைக்காமல் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் கான்கீரிட் தரைத்தளம் அமைப்பதற்கு, 5.30 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு நேற்று முன்தினம் டெண்டர் விடப்பட்டது. ஓரிரு நாளில் பணி துவங்கி, வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் பணி முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு விடப்படவுள்ளது.