| ADDED : டிச 08, 2025 06:21 AM
பள்ளிப்பட்டு: பஜார் சாலை வழியாக காலை, மாலை நேரத்தில் அதிக பாரத்துடன் கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நேர கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, பள்ளிப்பட்டு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் கரும்பு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகிறது. டிராக்டர் மற்றும் லாரிகளில் வாகனத்தின் அளவை தாண்டி வாகனங்களுக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் விதமாக, அதிகளவில் கரும்பு கட்டுகள் ஏற்றி செல்லப்படுகின்றன. இதனால், அந்த வாகனங்களை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த வாகனங்கள், நகரங்களில் பஜார் சாலையை கடந்து செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்களை கடக்கும்போது, கரும்பு கட்டுகளில் உரசி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அதிக வாகன போக்குவரத்து உள்ள காலை, மாலை நேரத்தில் கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்களை நகருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.