பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்களால் நெரிசல்
ஊத்துக்கோட்டை:ஆடி மாதம் ஏழாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, திரளான பக்தர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கனரக வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஏழாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் வைத்தல், வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்கள், ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர், சத்தியவேடு வழியே திருப்பி விடப்பட்டன. கார், வேன் ஆகிய வாகனங்கள் அதிகளவில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.