சிலிண்டர் கசிவால் பள்ளி சமையலறையில் தீ விபத்து
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் ஊராட்சி காலனியில் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 29 மாணவ- -- மாணவியர் பயின்று வருகின்றனர்.மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் உள்ள மதிய உணவு சமையலறை கூடத்தில் காலை உணவு திட்டம் வாயிலாக சிற்றுண்டி தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. அதே பகுதியை சேர்ந்த மூன்று பெண்கள் பணியில் உள்ளனர்.நேற்று காலை 8:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் காலை உணவு திட்ட பணியாளர்கள் மாணவர்களுக்கு உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிய துவங்கியது. தீ மளமளவென அறை முழுதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கூச்சலிட்டனர்.இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த நாகபூஷனம் 26 என்பவர் அறையில் பரவிய தீயை தண்ணீர் ஊற்றி கட்டுப்படுத்தி, சிலிண்டரில் ஏற்பட்ட தீயை கோணிப்பையை தண்ணீரில் நனைத்து அணைத்தார். இந்த விபத்தில் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதில் உணவு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் எரிந்து நாசமாகின.சிலிண்டரில் ஒருவாரமாக கசிவு ஏற்படுவதாக சத்துணவு பணியாளர்கள் முன்கூட்டியே பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த நிலையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.தீ விபத்து குறித்து திருத்தணி வருவாய் துறையினர் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.