உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிருஷ்ணா நீரை தேக்கி வைக்க பூண்டி நீர்த்தேக்கத்தில் தடுப்பு கரை

கிருஷ்ணா நீரை தேக்கி வைக்க பூண்டி நீர்த்தேக்கத்தில் தடுப்பு கரை

திருவள்ளூர்:ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ணா நீரை தேக்கி வைக்க, பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்காலிக தடுப்பு கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே கொசஸ்தலை ஆற்றின் நடுவில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு உள்ளது.கொசஸ்தலை ஆறு, ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர் மற்றும் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.இங்கு சேகரமாகும் தண்ணீர், சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, கால்வாய் வாயிலாக புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.பூண்டி ஏரி நீர்த்தேக்கம் 3.23 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. உபரி நீர் வெளியேறும் வகையில், 16 மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மழை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தால், உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.நீர்த்தேக்கம் கட்டப்பட்டு, 77 ஆண்டுகள் கடந்த நிலையில், இங்குள்ள அவசர கால நீர் வெளியேற்றும் மதகு கதவணைகள் பழுதடைந்து விட்டன.இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன், 9.48 கோடி ரூபாய் மதிப்பில், கதவணைகள் சீரமைப்பு பணியை பொதுப்பணித் துறை - நீர்வளம் துவக்கியது.தற்போது, 16 கதவணைகளில், 8 மட்டுமே சீர்படுத்தப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள 8 கதவணைகள் சீரடைக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 380 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது, பூண்டி நீர்த்தேக்கத்தில் பராமரிப்பு பணி நடப்பதால், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு 277 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.இன்னும் சில நாட்களில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கூடுதல் மழைநீர் வரும் என்பதால், தற்போது, பூண்டி நீர்த்தேக்கத்தின் கதவணை அருகே ஆழப்படுத்தப்பட்டு, அதை சுற்றிலும் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மழை காலம் துவங்குவதற்குள், மதகுகள் சீரமைத்தால் மட்டுமே, மழைநீர் சேகரிக்க முடியும். இல்லாவிட்டால், நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீர் அனைத்தும் கடலில் கலக்கும் அபாயம் உள்ளது.எனவே, பொதுப்பணித் துறை - நீர்வள ஆதாரத் துறையினர் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பார்வையாளர் மாடம் அமைப்பு

பூண்டி நீர்த்தேக்கம் 12.5 சதுர கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. புல்லரம்பாக்கம், சதுரங்கபட்டினம், கைவண்டூர், பாண்டூர், பட்டரைபெரும்புதுார், அரும்பாக்கம் வரை, நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணியர் குழந்தைகளுடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா தலமாக திகழும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் பார்வையாளர்கள், நீர் நிரம்பிய நீர்த்தேக்கத்தின் எழில்மிகு காட்சியை கண்டுகளிக்கும் வகையில், பார்வையாளர் கோபுரம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்ததும், பார்வையாளர்கள் பூண்டி நீர்த்தேக்கத்தின் எழில்மிகு காட்சியை கண்டு ரசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை