பள்ளி அருகே சுற்றுச்சுவர் இல்லாத குட்டையால் அபாயம்
ஆர்.கே.பேட்டை, :ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ்.கண்டிகை ஊராட்சியில் சஞ்சீவிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் மேற்கில் அரசு தொடக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு பள்ளியின் வடக்கில் சுற்றுச்சுவரை ஒட்டி சதுப்பு நில குட்டை உள்ளது. இந்த குட்டையில், 6 அடி உயரத்திற்கும் மேலாக கோரை புற்கள் வளர்ந்துள்ளன. அரசு பள்ளிக்கு பின்புறம் சுற்றுச்சுவரை ஒட்டி இந்த குட்டை அமைந்துள்ளதால், பள்ளிக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்தது.தற்போது, சஞ்சீவிபுரம் கிராமத்தில் புதிய தெருக்கள் உருவாகியுள்ள நிலையில், இந்த குட்டையை ஒட்டியும், தெருக்கள் மற்றும் வீடுகள் அமைந்துஉள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள், இந்த குட்டையை ஒட்டியுள்ள கான்கிரீட் சாலை வழியாக தான் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், இந்த சதுப்பு நில குட்டையில், கிராமத்தின் கழிவுநீரும் கலக்கிறது. கழிவுநீர் கலப்பதை ஒன்றிய அதிகாரிகள் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செடி, கொடிகள் வளர்ந்துள்ள குட்டையில், விஷபூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.எனவே, பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, சதுப்பு நில குட்டைக்கு சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.