சேதமடைந்த கூவம் ஆற்று தரைப்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம்
கடம்பத்துார்:திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது சத்தரை ஊராட்சி. சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தில் தண்ணீர் வழிந்தோடியது.இதில், 2023ம் ஆண்டு சேதமடைந்து சீரமைக்கப்பட்ட பாலப்பகுதியில் சேதமடைந்தது. இதையடுத்து வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர்.இதில், நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் இருபுறமும் உள்ள சத்தரை, கொண்டஞ்சேரி ஊராட்சி எல்லைப் பகுதியில் ஆற்றின் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது என, எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.ஆனால், எச்சரிக்கை பதாகையையும் மீறி, இருசக்கர வாகன ஓட்டிகள் அபாய நிலையில் சென்று வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.