பொன்னேரி - அண்ணாமலைச்சேரி பேருந்து சேவையில் குறைபாடு
பொன்னேரிஅரசு போக்குவரத்து கழகத்தின் பொன்னேரி பணிமனையில் இருந்து, அண்ணாமலைச்சேரி பகுதிக்கு, தடம் எண். 90ஏ அரசு பேருந்து இயக்கப்படுகிறது.இந்த பேருந்து பொன்னேரி - கும்மிடிப்பூண்டி - அண்ணாமலைச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படுவதால், பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.இந்நிலையில், இந்த பேருந்த வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், மற்ற நாட்களில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதாக கிராமவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.மேற்கண்ட பேருந்தின், சேவை குறைபாடால், மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி தவிப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:தேவம்பட்டு, அகரம், பள்ளிப்பாளையம், சேகண்யம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், மேல்நிலை படிப்பை தொடர கும்மிடிப்பூண்டி செல்கின்றனர்.மேற்கண்ட தடம் எண். 90ஏ, மாலை, 4:30மணிக்கு கும்மிடிப்பூண்டி வழியாக அண்ணாமலைச்சேரி செல்லும். பள்ளி விடும் நேரத்தில் பேருந்து அந்த வழித்தடத்தில் செல்வதால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், இந்த பேருந்து, வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இது குறித்து பணிமனை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பள்ளி மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. குறிப்பாக கிராமப்புற பெண் பிள்ளைகள் பள்ளி படிப்பபை தொடர முடியாத நிலையும் உருவாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், பள்ளி மாணவர்கள், கிராமவாசிகள் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.