நடைமேடை சீரமைப்பு பணியில் காலதாமதம் ரயில் நிலையத்தில் வயதான பயணியர் சிரமம்
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை சீரமைக்கும் பணி, ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால், விரைவு ரயிலில் வரும், வயதான மற்றும் குழந்தைகளுடன் வரும் பெண் பயணியர், ரயிலில் இருந்து இறங்குவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்து உள்ளது. ஆறு நடைமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் 1.40 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். தினமும் 160 புறநகர் மின்சார ரயில், 11 விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்கின்றன. இந்நிலையில், மத்திய அரசின் 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், திருவள்ளூர் ரயில் நிலையம், 28 கோடி ரூபாய் மதிப்பில், 2023 ஆகஸ்ட் மாதம் மேம்பாட்டு பணி துவங்கியது. பணி துவங்கிய ஓராண்டுக்குள் நிறைவுபெறும் என, ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால், ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால், இரு ஆண்டுகளாகியும் ஆமை வேகத்தில் பணி நடக்கிறது. தற்போது, ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடையை சீரமைக்க, கான்கிரீட் உடைக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் சீரமைக்கவில்லை. பெரும்பாலான விரைவு ரயில்கள் ஒன்றாவது நடைமேடையில், ஒரு நிமிடம் மட்டுமே நின்று செல்கின்றன. ரயில்கள் வந்து நின்றதும், கீழே இறங்கும் பயணியர், கான்கிரீட் உடைக்கப்பட்டிருப்பதால், தடுமாற்றம் அடைகின்றனர். குறிப்பாக, முதியோர், குழந்தைகளுடன் வரும் பெண் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, நடைமேடை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை, விரைவு ரயில்களை இரண்டு அல்லது மூன்றாவது நடைமேடையில் நிறுத்த வேண்டும் என, பயணியர் சங்கத்தினர், ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.