பணிமனையில் டீசல் பம்ப் கட்டுமான பணி தீவிரம்
பொதட்டூர்பேட்டை:அடிப்படை வசதிகள் இல்லாததால், 15 ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் பெயரளவில் செயல்பட்டு வந்த பணிமனைக்கு, தற்போது டீசல் நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதட்டூர்பேட்டையில், 2010ல் அரசு போக்குவரத்து பணிமனை துவக்கப்பட்டது. இந்த பணிமனைக்கு பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த பணிமனை பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு வருவதாக பகுதிமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இங்கிருந்து, 13 நகர பேருந்துகளும், சென்னைக்கு செல்லும் இரண்டு பேருந்துகளும் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிமனையில் இருந்து அதிகாலையில் சென்னை, வேலுார், திருப்பதி, சித்துார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனையில், டீசல் பம்ப் அமைக்கும் பணி நடந்து வருகிறது. டீசல் பம்ப் அமைக்கப்பட்டால், சுற்றுப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள், இந்த பணிமனையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதட்டூர்பேட்டையின் போக்குவரத்து வசதி மேம்படும் என, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.