உதவி பொறியாளர் பணியிடம் காலி பணிகளை ஆய்வு செய்வதில் சிக்கல்
திருவாலங்காடு:ஊரக வளர்ச்சி துறை வாயிலாக நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய உதவி பொறியாளர் இல்லாததால், பணிகளின் தரம் குறித்து ஆராய்வதில் சிக்கல் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு, 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதிகள் கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, திருவாலங்காடு என, மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி துறை வாயிலாக நடைபெறும் கட்டடம், பாலம், சாலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் பணிகளை உதவி பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர். அதன்படி, மண்டலத்திற்கு ஒன்று என, மூன்று உதவி பொறியாளர் பணியிடம் உள்ளது. தற்போது, திருவாலங்காடு மண்டலத்திற்கு மட்டுமே உதவி பொறியாளர் உள்ளார். மற்ற இரண்டு மண்டலத்திற்கான உதவி பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், மூன்று மண்டலத்தையும் ஒருவரே கவனித்து வருகிறார். இதனால், பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் பணிகள் தாமதமாக நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடத்தை விரைந்து நிரப்ப, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.