மழைக்கு பின் திறக்கப்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளிப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி மற்றும் அரசு மேல்நிலை பள்ளிகளில், மழையால் மாணவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.திருவள்ளூர் நகராட்சி கட்டுப்பாட்டில், 9 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் புங்கத்துார் ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டன. இரண்டு நாட்கள் மழையால் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதில், கொசு உற்பத்தியாக மாணவ, மாணவியருக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக, பெற்றோர்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இந்த நிலையில், நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில், சுகாதார அலுவலர் மோகன் தலைமையிலான அலுவலர்கள், நேற்று 11 பள்ளிகளிலும், கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்தனர். மேலும், பள்ளி கழிப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டது.நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.