காட்டுப்பள்ளி சாலை படுமோசம் 8 போடும் வாகன ஓட்டிகள்
மீஞ்சூர்:எண்ணுார் துறைமுகம் - காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலை சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். மீஞ்சூர் அடுத்த எண்ணுார் துறைமுகம் பகுதியில் இருந்து, காட்டுப்பள்ளி வழியாக பழவேற்காடு செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையின் பல்வேறு பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளது. துறைமுகங்களுக்கும், கன்டெய்னர் கிடங்குகளுக்கும் சென்று வரும் கனரக வாகனங்கள், இச்சாலையில் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன. பள்ளங்களை தவிர்க்க வளைந்து வளைந்து செல்கின்றன. இதனால், எதிரில் வரும் வாகனங்கள் கூடுதல் சிரமங்களுக்கு ஆளாகின்றன. கிராமவாசிகள், தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோர், கனரக வாகனங்கள் இடது, வலது என மாறிமாறி பயணிக்கும்போது அச்சம் அடைகின்றனர். இதற்கு முன், இச்சாலையில் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மீனவ கிராமத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். எனவே, மீண்டும் விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.