பேருந்து நிலைய கூரை இடிந்து முதியர் காயம்
திருவள்ளூர்:திருவள்ளூர் பேருந்து நிலைய கூரை பெயர்ந்து விழுந்ததில், அங்கிருந்த முதியவர் பலத்த காயமடைந்தார்.திருவள்ளூர், ராஜாஜி சாலையில், திரு.வி.க., பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு, 40 ஆண்டுக்கும் மேலாகிறது. இந்த பேருந்து நிலையத்தில், பயணியர் அமரும் இருக்கை, நிழற்குடை மற்றும் 16 கடைகள் செயல்பட்டு வருகின்றன.பேருந்து நிலைய கூரையில் உள்ள 'கான்கிரீட்' வலுவிழந்து வருகிறது. கட்டடத்தின் பக்க சுவரும் பாழடைந்து வருகிறது.இந்த நிலையில், நேற்று காலை, பேருந்து நிலைய பயணியர் அமரும் இடத்தில், முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென கூரையில் இருந்த கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது.இதில், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் கால்கள் மீது கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதனால், அவரது கால்களில் பலத்த காயமடைந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.