உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சராசரி அளவை விட கூடுதலாக மழை பெய்தும்... பயனில்லை:போதிய கட்டமைப்பு இல்லாததால் வீணாகும் ஏரி நீர் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம்

சராசரி அளவை விட கூடுதலாக மழை பெய்தும்... பயனில்லை:போதிய கட்டமைப்பு இல்லாததால் வீணாகும் ஏரி நீர் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை சராசரியை விட, கூடுதலாக கிடைக்கும் தண்ணீரை சேகரிக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், மழைநீர் தேங்கிய சில மாதத்திலேயே, தண்ணீரை சேமிக்க போதிய கட்டமைப்பு இல்லாததால், ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விடும் அவலம் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்று நீர்பாசன பராமரிப்பில், 336 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும், 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டவை. சில ஏரிகள், 450 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரி நீர் பாசனத்தை நம்பியே, பெரும்பாலான விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றை தவிர, 100 ஏக்கருக்கும் குறைவாக, 581 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை ஊரக வளர்ச்சி துறையினர் பராமரித்து வருகின்றனர். அதன்படி, மாவட்டம் முழுதும் 917 ஏரிகளை நம்பி, ஆண்டுதோறும் 1.25 லட்சம் விவசாயிகள் உள்ளனர்.

நடவடிக்கை

இதற்கு காரணம், பிரதான ஏரிகளான கூவம், ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளில், மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் இருக்கும். அதன்பின் வறண்டு விடும். இது தவிர, சிறிய அளவிலான குளம், குட்டை என, 3,296 நீர்நிலைகள் உள்ளன. ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி, விவசாயிகள் நெல், கரும்பு மற்றும் பல்வேறு பயிர் வகைகளை பயிரிட்டு வருகின்றனர். கிணற்று பாசனத்திற்கு, நிலத்தடி நீராதாரம் தேவை. இதற்காக, மழைக்காலத்தில் நிரம்பும் ஏரிகளை ச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில் உ ள்ள கிணறுகளில், நிலத்தடி நீர் உயர்ந்து, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய், உபரிநீர் கால்வாய் ஆகியவை துார்வாராமல் உள்ளது. ஈக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், தலக்காஞ்சேரி உள்ளிட்ட பெரிய ஏரிகளில், சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும், நீர்வளத்துறையினர் முழுமையாக அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள், விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி, ஏரிகளில் நிரம்பும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், அமைதி காத்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால், மழைக்காலத்தில் மட்டும் நிரம்பும் ஏரிகள், ஒரு சில மாதங்களில் நீர்வற்றி, பாலைவனமாக மாறி விடுகின்றன. இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரியான, 115.28 செ.மீ., மழையை விட, அதிகளவு மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழையின் சராசரி 44.95 செ.மீ., மற்றும் வடகிழக்கு பருவமழையின் சராசரி 60.41 செ.மீ., ஐந்து ஆண்டுகளாக சராசரியை விட, 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. Gallery

வறட்சி

நீர்வளத்துறையினரின் அலட்சியத்தால், ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து, பல மாதங்கள் வறட்சியாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், 10 ஆண்டுகளை கணக்கிட்டால், மூன்று ஆண்டுகளை தவிர, மற்ற ஏழு ஆண்டுகளில், சராசரியைவிட அதிகளவில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வடகிழக்கு பருவ மழையின் போது, சராசரியை விட, 50 - 20 சதவீதம் வரை அதிகளவில் மழை பெய்துள்ளது. ஏரிகளை முறையாக துார்வாரியும், நீர்வரத்து மற்றும் உபரிநீர் கால்வாய்களையும், கலங்கல்களையும் முறையாக பராமரித்திருந்தால், மழை நீர் மாதக்கணக்கில் ஏரிகளில் தேங்கியிருக்கும். ஆனால், நீர்வளத்துறையினர் ஏரியை துார்வாரினால் கால்வாயை சீரமைப்பதில்லை. கால்வாயை சீரமைத்தால், ஏரியை துார் வாருவதில்லை. இப்படி, அரைகுறையாக சீரமைப்பு பணி மேற்கொண்டு வருவதால், மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், தண்ணீர் ஒரு சில மாதத்திற்கு மேல் தேங்காமல், வற்றி விடுகிறது.

கண்காணிப்பு

இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இந்த முறையாவது, ஏரிகளில் முழு அளவு தண்ணீர் தேங்குமா அல்லது வெளியேறுகிறதா என்பதை நீர்வளத்துறையினர் கண்காணித்து, ஆண்டு முழுதும் தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்த 2015 - 2024 வரை பெய்த மழையளவு விவரம் ஆண்டு சராசரி 115.28 செ.மீ., ஆண்டு பெய்த மழையளவு(செ.மீ.,) வித்தியாசம் 2015 198.58 83.3 (அதிகம்) 2016 83.02 32.26 (குறைவு) 2017 126.58 11.3(அதிகம்) 2018 75.99 39.29 (குறைவு) 2019 128.67 13.39 (அதிகம்) 2020 144.10 28.82 (அதிகம்) 2021 192.46 77.18 (அதிகம்) 2022 143.50 28.22 (அதிகம்) 2023 167.89 52.61 (அதிகம்) 2024 160.51 45.23(அதிகம்) 25 டி.எம்.சி., வீண் வடகிழக்கு பருவமழை காலத்தில் கொசஸ்தலை, ஆரணி மற்றும் கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆறுகளில் தடுப்பணை இல்லாததது, பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில், கூடுதல் நீர் சேகரிக்க திட்டமிடாதது உள்ளிட்ட காரணங்களால், ஆண்டுதோறும், 15 டி.எம்.சி.,க்கு மேல் மழைநீர் கடலில் கலக்கிறது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள ஏரிகள் துார்வாராமல் இருப்பதால், 10 டி.எம்.சி.,க்கு மேல் தண்ணீர் சேகரிக்க முடியாமல், வீணாக வெளியேறி வருகிறது. இதனால், விவசாயத்திற்கு போதுமான தண்ணீரின்றி, விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை