பொன்னேரியில் ஏ.டி.எம்.,ல் கூடுதல் பணம் வந்ததால் பரபரப்பு
பொன்னேரி:பொன்னேரி, திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில், எச்.டி.எப்.சி., வங்கியின், ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம், பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர் ஒருவர், 2,000 ரூபாய் பெற, அங்குள்ள பட்டன்களை அழுத்தி பணத்திற்கு காத்திருந்தார்.அப்போது, தான் கேட்ட தொகையை விட, கூடுதலாக, 2,000 ரூபாய் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து உடனடியாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.,ன் வங்கியை தொடர்பு கொண்டு தெரிவித்ததை தொடர்ந்து, உடனடியாக அந்த மையத்தின் கதவு பூட்டப்பட்டது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏ.டி.எம்., கூடுதல் பணம் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.அதையடுத்து, கடைசியாக, ஏ.டி.எம்.,ல் செலுத்தப்பட்ட தொகை, தற்போது உள்ளது மற்றும் வாடிக்கையாளர்கள் பெற்றது குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.வாடிக்கையாளர்கள் எத்தனை பேர் கூடுதலாக பணம் பெற்று உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஏ.டி.எம்.,ல், கேட்ட தொகையை விட கூடுதலாக, பணம் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.