உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை

கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை

பொன்னேரி: நெடுவரம்பாக்கம் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம், ஜெகன்னாதபுரம், இருளிப்பட்டு, நெடுவரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், சொர்ணவாரி பருவத்திற்கான அறுவடை பணிகள் கடந்த மாதம் முடிந்தன. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள், நெடுவரம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஒரு வாரமாக 'இடம் இல்லை; வண்டி இல்லை' எனக் கூறி, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகளின் நெல் மூட்டைகள், கொள்முதல் நிலைய வளாகத்தில் டிராக்டர்களில் வைக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது பெய்து வரும் மழையால், நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளின் அலட்சியத்தால், 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை பெறுவதை தவிர்க்கும் அதிகாரிகள், இரவு நேரங்களில் வியாபாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, வீணாகி வருவதால், உடனே கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !