பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஒரு மணி நேரம் கடும் நெரிசல்
மேல்நல்லாத்துார்:மேல்நல்லாத்துாரில் நேற்று முன்தினம் பெருமாள் கோவில் உற்சவத்தில் நடந்த பட்டாசு விபத்தில், ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார் ஊராட்சி. இங்குள்ள பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு புரட்டாசி மாத மூன்றாவது வார உற்சவம் நடந்தது. பின், இங்குள்ள ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகே வாண வேடிக்கை நடந்தது. அப்போது, கீற்று கொட்டகையில் எதிர்பாராதவிதமாக பட்டாசு விழுந்து தீப்பிடித்தது. தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனால், நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.