வானிலை எச்சரிக்கையால் பழவேற்காடு மீனவர்கள் உஷார்
கும்மிடிப்பூண்டி:வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, படகுத்துறைகளில் படகுகளை நிறுத்தி, மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு மீனவர்கள் எடுத்து சென்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டத்தில், பழவேற்காடு ஏரி மற்றும் கடலை ஒட்டிய பகுதியில், 56 மீனவ கிராமங்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில் துவங்கி, காட்டுப்பள்ளிகுப்பம் வரையிலான, 18.9 கி.மீட்டர் நீள கடலோர பகுதியில், 30 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நேற்று முன்தினம் மேற்கண்ட அனைத்து மீனவ கிராமங்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று அனுப்பப்பட்டது.வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால், தமிழ்நாடு கடற்பகுதியில் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை காற்றின் வேகம் அதிகரிக்க கூடும். அதனால் அந்த தேதிகளில், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். ஏற்கனவே ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து, மேற்கண்ட மீனவ கிராமத்தினர் அனைவரும் தங்கள் படகுகளை அந்தந்த படகுதுறைகளில், நேற்று பாதுகாப்பாக நிறுத்தினர். மீன்பிடி உபகரணங்கள், வலைகள் ஆகியவற்றை எடுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.மீன்வளத்துறை, வருவாய் துறை, கடலோர போலீசார் மேற்கண்ட மீனவ கிராமங்களில் ரோந்து மேற்கொண்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.