காலாவதியான தின்பண்டம் விற்பனை அசட்டையில் உணவு பாதுகாப்பு துறை
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு, மணவூர், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதிகளில் பேக்கரி, டீக்கடை, உணவகங்கள், இறைச்சி கடைகள் என, 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.சின்னம்மாபேட்டை பகுதியில் உள்ள சில பேக்கரிகளில் தரமற்ற, காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து சின்னம்மாபேட்டையை சேர்ந்த லீலா கிருஷ்ணன் கூறியதாவது:சின்னம்மாபேட்டையில் உள்ள பேக்கரிகள் மற்றும் ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக பலரும் புகார் தெரிவித்து செல்கின்றனர். காலாவதியான பப்ஸ், கேக் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது.மாவட்டத்தில் சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான, கலப்பட உணவு பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மேலும், காலாவதியான தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர்.இது, கிராமப்புறத்தில் உள்ள கடை உரிமையாளர்களின் அறியாமையும் முக்கிய காரணமாக உள்ளது. பொருட்களை வாங்கும் சிலர், காலாவதி தேதியை கண்டுபிடித்து கடை உரிமையாளர்களை கண்டித்து செல்கின்றனர்.பேக்கரி ஸ்வீட்ஸ் மற்றும் ஓட்டல்களில் உணவுப் பொருட்களில் காலாவதி தேதி இல்லாததால், அவர்கள் காலாவதியானாலும் விற்கின்றனர். இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சின்னம்மாபேட்டையில் தரமற்ற, காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரி,திருவள்ளூர்.