உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதியவரை கடத்தி கொன்ற சம்பவம் மாஜி அமைச்சர் ரோஜா கண்டனம்

முதியவரை கடத்தி கொன்ற சம்பவம் மாஜி அமைச்சர் ரோஜா கண்டனம்

திருத்தணி: திருத்தணியில் முதியவர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், நகரி புதுப்பேட்டையில் வசித்து வந்தவர் குணசீலன், 66. இவரது மகள் சங்கீதா, 42, திருத்தணியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். பணிகளை குணசீலன் கவனித்து வந்தார். கடந்த ஜூன் 20ம் தேதி குணசீலன் கட்டுமான பொருட்கள் வாங்க நகரிக்கு சென்றவர், இரு நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் சங்கீதா திருத்தணி போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன் சங்கீதா, தன் தந்தையை, நகரி புதுப்பேட்டையை சேர்ந்த அய்யப்பன், 32 , கங்காதரன், 57, ஆகியோர் கடத்தி சென்றுள்ளதாக மீண்டும் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அய்யப்பன், கங்காதரனிடம் விசாரணை செய்ததில், குணசீலனை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி நகரி கொத்துார் ஏரியில் வீசியதை ஒப்புக் கொண்டனர். நேற்று முன்தினம் போலீசார் ஏரியில் கிடந்த குணசீலன் உடல் பாகங்களை கண்டெடுத்து டி.என்.ஏ., பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அய்யப்பன் குணசீலன் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி குணசீலனிடம் 15 லட்சம் ரூபாய் கங்காதரன், அய்யப்பன் சேர்ந்து வாங்கியுள்ளனர். வீட்டுமனை வாங்கி தராததால், பணத்தை குணசீலன் திரும்பி கேட்டதால், இருவரும் சேர்ந்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் கொலை, கொள்ளை, மானபங்கம் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள். குணசீலன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அய்யப்பன் தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய நபராக செயல்படுகிறார். இவர் நகரி எம்.எல்.ஏ., பானுபிரகாஷ் ஆதரவாளர் என்பதால் நகரில் நடந்த ஜாத்திரை விழாவின் போது, எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் படங்களுடன் அய்யப்பன் படமும் சேர்த்து நகர் முழுதும் பேனர் வைத்திருந்தனர். தற்போது அய்யப்பன் குற்றவாளி என்பதால் அவர் முகம் தெரியாமல் பிளாஸ்டர் ஒட்டி வைத்துள்ளனர். இவ்வாறு ரோஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !