பெண் போல பேசி ஏமாற்றிய நால்வர் கைது 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: டி.எஸ்.பி.,
திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டையை சேர்ந்தவர் சத்தியநாதன், 20. இவரிடம், கடந்த சில மாதங்களாக திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, பூஞ்சோலை நகரைச் சேர்ந்த தினேஷ், 24, என்பவர் பெண் போல பேசி பழகியுள்ளார்.இதை உண்மை என நம்பிய சத்தியநாதன், 'நேரில் சந்திக்கலாமா' எனக் கேட்டுள்ளார். பெண் குரலில் பேசி ஏமாற்றிய தினேஷ், சின்னம்மாபேட்டை தரைப்பாலம் அருகே வரும்படி அழைத்துள்ளார்.அப்போது, அங்கு மறைந்திருந்த தினேஷ், அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான ஷியாம், 20, விஷ்ணுபாலா, 19, மற்றும் அரக்கோணத்தைச் சேர்ந்த கவுதம், 22, ஆகியோருடன் சேர்ந்து, சந்தியநாதனை தாக்கி, அவரிடமிருந்த 6,000 ரூபாய், வெள்ளி பிரேஸ்லெட், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.இதுகுறித்து, திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், விஷ்ணுபாலா ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கவுதமை நேற்று கைது செய்தனர். ஏற்கனவே ஷியாம் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.இதுகுறித்து திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் கூறியதாவது:-தினேஷ், கவுதம், ஷியாம், விஷ்ணுபாலா ஆகிய நால்ரும் நண்பர்கள். இவர்கள், மொபைல்போனில் 'ப்ரண்ட்ஸ் ஆப்' வாயிலாக இளம்பெண் 'ஐடி' போலியாக உருவாக்கியுள்ளனர். பெண் என்று நம்பி பேசும் வாலிபர்களை, பெண் குரலில் பேசி தனிமையான பகுதிகளுக்கு வரவழைத்து, அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறித்து வந்துள்ளனர்.மேலும், இந்த 'ஆப்' பயன்படுத்தி, 50க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளது தெரிந்தது. இவர்களிடம் யாராவது பணம் அல்லது நகை பறிகொடுத்திருந்தால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.கைது செய்யப்பட்ட கவுதம், தினேஷ் இருவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.