இலவச வீட்டுமனை பட்டா டி.ஆர்.ஓ., விசாரணை
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், பெரியார் நகர், எம்.ஜி.ஆர்., நகர், நேரு நகர், வள்ளி நகர், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பின்புறம் மற்றும் லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில் ஆகிய பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாறை புறம்போக்கு, மலைபுறம்போக்கு போன்ற அரசு நிலத்தில் வீடுகள் கட்டி, 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இதுவரை பட்டா வழங்காததால், அரசு நிலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் தவித்து வந்தனர்.முதல்வர் ஸ்டாலின், ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களில் வீடுகள் கட்டி வசிப்பவர்களுக்கு தகுதியாவனர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து திருத்தணி வருவாய் துறையினர் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் 1,400 பேரிடம் விண்ணப்பங்கள் பெற்று சரிபார்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா ஆகியோர் பெரியார்நகர் பகுதியில் வசிப்பவர்களிடம் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து விசாரணை நடத்தினர். இதில் தகுதியானவர்களுக்கு வரும் 19ம் தேதி கும்மிடிப்பூண்டி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இலவச பட்டா வழங்கப்படவுள்ளது.