அரசு பேருந்து பழுது திருவள்ளூரில் பயணியர் அவதி
திருவள்ளூர், திருப்பதியில் இருந்து, சென்னைக்கு, அரசு விரைவு பேருந்து, நேற்றுமுன்தினம் இரவு 8:00 மணியளவில் 70-க்கும் மேற்பட்ட பயணியருடன் புறப்பட்டது.ரேணிகுண்டா, நகரி, திருத்தணி வழியாக திருவள்ளூருக்கு, இரவு 10:00 மணியளவில் வந்தது. அப்போது, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, பேருந்தின் பின்புற 'டயரில்' திடீரென புகை வந்தது.இதையடுத்து, ஓட்டுநர் அவசரம் அவசரமாக பேருந்தினை சாலையோரம் நிறுத்தி, பயணியரை இறக்கி விட்டனர். பின், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தினை ஆய்வு செய்தபோது, பேருந்தின் பின்புற 'டயர்' பிரேக் பிடித்ததால், அதன் 'ரிம்மி'லிருந்து புகை கிளம்பி, பேருந்து பழுதாகி நின்றது தெரிய வந்தது.இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், திருத்தணி பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஒரு மணி நேரம் பயணியர் காத்திருந்த நிலையில், அவ்வழியாக வந்த வேறு பேருந்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.