ரூ.20 கோடி அரசு நிலம் அத்திப்பேடில் மீட்பு
பொன்னேரி:தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, 20 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.32 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர். காட்டுப்பள்ளி - மாமல்லபுரம் சென்னை எல்லை சாலை திட்டப்பணிகளுக்காக, சோழவரம் ஒன்றியம், அத்திப்பேடு ஊராட்சியில், இருந்த ஊராட்சி மன்ற கட்டடம், அங்கன்வாடி மையம், கிராம சேவை கட்டடம் என, ஐந்து அரசு கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. அவற்றிற்கு மாற்றாக, அதே பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்காத வருவாய்த்துறையை கண்டித்து, கிராம மக்கள் கடந்த, சுதந்தர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். இந்நிலையில், நேற்று தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, 1.32 ஏக்கர் பரப்பிலான நத்தம் புறம்போக்கு வகைபாட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த, கட்டடங்கள், பொக்லைன் மூலம் இடித்து அகற்றபட்டன. மீட்கப்பட்ட இடத்தில், சென்னை எல்லை சாலை திட்டப்பணிகளுக்காக இடித்து அகற்றப்பட்ட அத்திப்பேடு ஊராட்சியின் அரசு கட்டடங்களை உடனடியாக கட்டித்தரவேண்டும் என கிராம மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.