கொசஸ்தலை ஆற்றில் புற்கள் தண்ணீர் செல்வதில் சிக்கல்
திருத்தணி: நல்லாட்டூர் கொசஸ்தலை ஆற்றில் கோரை புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், ஆற்றில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பகுதியில் இருந்து, லவா, குசா ஆறுகள் இணைந்து கொசஸ்தலை ஆறாக உருவாகி, சொரக்காய்பேட்டை, புண்ணியம், நகரி, நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, ராமாபுரம் வழியாக, நாராயணபுரம் கூட்டுச்சாலை அருகே பூண்டி ஏரியை அடைகிறது. 'டிட்வா' புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால், அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், திருத்தணி அடுத்த நல்லாட்டூர் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், அதிகளவில் கோரை புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில் அருகே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் தண்ணீர் கோரை புற்கள் வளர்ந்துள்ளதால், மீண்டும் ஆற்றிற்கு செல்கிறது. இதனால், விவசாய கிணறுகள் மற்றும் ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயநிலை உள்ளது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, கொசஸ்தலை ஆற்றில் வளர்ந்துள்ள கோரை புற்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.