ஜல்லி கற்கள் பெயர்ந்த நரசிங்கமேடு சாலை
பொன்னேரி:பொன்னேரி - தச்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மாதவரம் பகுதியில் இருந்து ஆமூர், ஆமூர் காலனி, மாலிவாக்கம் வழியாக நரசிங்கமேடு செல்லும் ஒன்றிய சாலை சேதம் அடைந்து உள்ளது.சாலையின் பல்வேறு பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும் உள்ளது. சேதம் அடைந்து உள்ள சாலையில் வாகன ஒட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். தற்போது, சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.பேருந்து போக்குவரத்து வசதியில்லாத, இந்த வழித்தடத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு தேவைகளுக்கு பொன்னேரி வந்து செல்ல இருசக்கர வாகனங்களையே நம்பி உள்ளனர். சாலை சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பது கிராமவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இந்த சாலையை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.