கள்ளச்சந்தையில் மது விற்பனை திருத்தணி ஒன்றியத்தில் அதிகரிப்பு
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் சின்னகடம்பூர், மத்துார் மற்றும் வள்ளியம்மாபுரம் ஆகிய பகுதிகளில், ஆறு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு, 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில், கள்ளச் சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்வதால், வேலைக்கு செல்லாமல் குடிக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பதை தடுக்க வேண்டிய போலீசார், கண்டும், காணாமல் உள்ளனர். இதனால், போலீசார் மீது கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, மாவட்ட எஸ்.பி., விரைந்து நடவடிக்கை எடுத்து, கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.