ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் இந்திய வீரர்கள் முன்னிலை
சென்னை: போரூரில் நடக்கும் ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் போட்டியில், இந்திய வீரர்கள் முன்னிலையில் உள்ளனர். சக்தி குரூப் ஆதரவில் தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடர், போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 வீரர்கள் மோதி வருகின்றனர். மொத்தம் ஒன்பது சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த இரண்டாவது சுற்றில், இந்திய வீரர் மாதேஷ் குமார், அர்ஜென் டினா வீரர் ரவுல் கிளவேரியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளில் முன்னிலை பெற்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் அர்ணவ், பெரு நாட்டு வீரர் கார்லோமாகனோ ஒப்லிடாஸை தோற்கடித்து இரண்டு புள்ளிகளில் முன்னிலையை தக்க வைத்தார். பெலாரஸ் எவ்ஜெனி பொடோல்சென்கோ மற்றும் இந்தியாவின் சம்யுக்தரேவா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. அதேபோல, கியூபாவின் ஜார்ஜ் மார்க்கோஸ் மற்றும் இந்தியாவின் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.